மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்) காலை பேருந்து கால்வாய்க்குள் மூழ்கிய விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலிலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிதி என்ற இடத்திலிருந்து சாட்னா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சார்தா கால்வாய் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காலை 7:30 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதில் 32 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.காலைவேளையில் பேருந்து கண்ணுக்குத் தெரியாத அளவுக்குத் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது. கால்வாய்க்கு வரும் தண்ணீரை நிறுத்தி மீட்பு பணி நடந்து வருகிறது. இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்தது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள இருந்தார். இந்த விபத்தின் காரணமாக அந்த விழாவை மாநில அரசு ரத்து செய்துள்ளது.