மோகன்லால் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரிஷ்யம் ஹாலிவுட்டுக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அந்தப் படத்தின் டைரக்டர் ஜீத்து ஜோசப் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை ஒருவர் மோகன்லாலின் வேடத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. மலையாளத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மோகன்லால், மீனா, சித்திக் மற்றும் ஆஷா சரத் மற்றும் பலரின் நடிப்பில் வெளியான படம் திரிஷ்யம். இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது. முதன்முதலில் மலையாள சினிமாவில் 50 கோடி வசூலை தாண்டியது இந்தப் படம் தான். அது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் கமல், கவுதமி நடிப்பில் பாபநாசம் ஆக இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளி நாட்டிலும் திரிஷ்யம் பரபரப்பாக பேசப்பட்டது. சீன மொழியில் கூட இதே கதை தயாரிக்கப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் 2வது பாகத்தை டைரக்ட் செய்ய ஜீத்து ஜோசப் தீர்மானித்தார். இதற்கு திரிஷ்யம் 2 என பெயரிடப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனாவுக்குப் பின்னர் கடும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், அன்சிபா, சித்திக், ஆஷா சரத் உள்பட பெரும்பாலானோர் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே வீடு மற்றும் பெரும்பாலும் அதே லொகேஷன்களில் வைத்துத் தான் 2வது பாகமும் படம் பிடிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திரிஷ்யம் 2 ஓடிடியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டது. வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் திரிஷ்யம் படம் ஹாலிவுட்டுக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இந்தப் படத்தின் டைரக்டர் ஜீத்து ஜோசப் கூறுகையில், திரிஷ்யம் படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாக கூறி ஹாலிவுட்டில் உள்ள ஒருவர் என்னை அணுகினார். மில்லியன் டாலர் பேபி என்ற படத்தில் நடித்த நடிகை தான் மோகன்லால் வேடத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த நபர் கூறினார். இது குறித்து கூடுதல் தகவல் எதுவும் எனக்கு தெரியாது. என்னிடம் திரைக்கதை வேண்டும் என்று கேட்டனர். அதன்படி நான் திரிஷ்யம் படத்தின் திரைக்கதையையும், சினிமாவையும் அனுப்பி வைத்துள்ளேன் என்று அவர் கூறினார்.