இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்

by Nishanth, Feb 16, 2021, 13:04 PM IST

சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்தியா 2-வது டெஸ்ட் போட்டியை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் டாசில் தோல்வி அடைந்தது தான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா டாசில் வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியில் வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அது தான் தற்போது நடந்துள்ளது. டாசில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இந்தியா 195 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. அஷ்வினின் அபார சதம் மற்றும் கேப்டன் விராட் கோஹ்லியின் அரை சதத்தால் இந்தியா 2வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 482 ரன்கள் என்ற மிக கடினமான இலக்குடன் இங்கிலாந்து நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இந்த இன்னிங்சிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். நேற்றே 50 ரன்களுக்குள் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்துக்கு மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. உணவு இடைவேளைக்குள் இங்கிலாந்து மேலும் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார்.

உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீதமிருந்த 3 விக்கெட்டுகளும் வீழ்ந்தன. ஜோ ரூட் 33 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் ரன் ஏதும் எடுக்காமலும், கடைசியில் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மோயின் அலி குல்தீப் யாதவின் பந்திலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அக்சர் படடேல் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஷ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது தவிர 2வது இன்னிங்சில் அவர் ஒரு சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி 4வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

You'r reading இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல் Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை