புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் ஆன டாக்டர் தமிழிசை தெரிவித்தார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநராக , தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் எளியமுறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், கலெக்டர் பூர்வமாகக், பாஜக தலைவர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை கூறியதாவது: நான் பதவி ஏற்கும்போது தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டேன். இதுவரை புதுவையில் எந்த ஆளுநரும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.புதுச்சேரிக்குத் தொழிற்சாலைகள் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன். இதனால் இங்கு உள்ள அனைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கும் எனக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என நினைப்பவர் நான்,தமிழ் புறக்கணிக்கப்பட்ட வில்லை, தமிழ் ஆராதிக்கப்படும், தமிழிசை ஆளுநராக இருக்கும் வரை தமிழ் போற்றப்படும்.
அரசியல் தலைவர்கள் பலர் என்னைச் சந்திக்க நேரம் கேட்டு உள்ளனர். அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவு எடுப்பேன்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட யார் என்னைச் சந்திக்கவேண்டும் என்றாலும் அவர்களுக்கு நான் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்திப்பேன் என்றார்.