பெற்றோர் உள்பட 7 உறவினர்கள் கோடாலியால் வெட்டிக் கொலை... இந்தியாவில் முதன்முதலாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை

by Nishanth, Feb 18, 2021, 11:08 AM IST

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.உத்திரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா என்ற இடத்திற்கு அருகே உள்ள பவன்கேதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இந்த கிராமத்தில் தான் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அந்த கொடூர சம்பவம் நடந்தது. திருமணமான ஷப்னத்திற்கு சலீம் என்ற ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னுடைய கணவன் மற்றும் உறவினர்களுக்குத் தெரியாமல் ஷப்னம் கள்ளக் காதலனுடன் தொடர்பு வைத்திருந்தார்.

ஆனால் பின்னர் இந்த விவரம் ஷப்னத்தின் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கள்ளக் காதலனைச் சந்திப்பதற்கு ஷப்னத்தின் உறவினர்கள் தடை விதித்தனர். ஆனாலும் ஒரு நாள் அதை மீறி தன்னுடைய கள்ளக் காதலனைப் பார்ப்பதற்காக ஷப்னம் சென்றார். அப்போது தங்களது உறவுக்குத் தடையாக இருக்கும் ஷப்னத்தின் உறவினர்கள் அனைவரையும் கொல்வதற்கு இருவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர்.

இதன்படி சம்பவத்தன்று இரவில் ஷப்னம் தன்னுடைய பெற்றோர், சகோதரர்கள் உள்பட உறவினர்கள் 7 பேருக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். சிறிது நேரத்திலேயே 7 பேரும் மயக்கம் அடைந்தனர். இந்த விவரத்தை ஷப்னம் தன்னுடைய கள்ளக் காதலன் சலீமுக்கு போன் செய்து தெரிவித்தார்.அவர் உடனடியாக ஷப்னத்தின் வீட்டுக்கு விரைந்து சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து கோடாலியால் 7 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு அம்ரோஹா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கு விசாரணை இரண்டு வருடங்கள் நடந்தன. பின்னர் கடந்த 2010 ஜூலை மாதம் ஷப்னம் மற்றும் அவரது கள்ளக் காதலன் சலீமுக்கு அம்ரோஹா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் உத்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களது மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர் இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.உச்ச நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து இருவருக்குமான மரண தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து கடைசி முயற்சியாக இருவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். ஆனால் அந்த மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதையடுத்து இருவருக்குமான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இருவரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெண்களைத் தூக்கில் போடுவதற்கு உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் மட்டுமே வசதி உள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கில் போட்ட பவன் ஜல்லாத் தான் ஷப்னத்தையும் தூக்கில் போட உள்ளார். சமீபத்தில் இரண்டு முறை இவர் மதுரா சிறைக்குச் சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.தூக்கில் போடுவதற்குக் கூடுதலாக சில வசதிகளைச் செய்ய வேண்டும் என்று சிறைத் துறை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருவதாக மதுரா சிறை கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் கூறினார். ஷப்னத்தை தூக்கில் போடுவதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.பெண்களைத் தூக்கில் போடுவதற்கான வசதி இந்த மதுரா சிறையில் 150 வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை இந்த சிறையில் ஒரு பெண் கூட தூக்கில் ஏற்றப்படவில்லை. தற்போது தான் முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு இந்த சிறையில் தூக்குக் கயிறு மாட்டப்பட உள்ளது.

You'r reading பெற்றோர் உள்பட 7 உறவினர்கள் கோடாலியால் வெட்டிக் கொலை... இந்தியாவில் முதன்முதலாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை