₹ 1496 பாக்கிக்காக மின் இணைப்பு துண்டிப்பு மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

by Nishanth, Feb 18, 2021, 15:43 PM IST

₹ 1496 பாக்கித் தொகையை கட்டாததால் மின்வாரியத் துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தால் மனமுடைந்த கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பெருங்கடைவிளை பகுதியை சேர்ந்தவர் சனல் குமார் (42). இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சதி தேவி. இவர்களுக்கு அபிஜித் (17) மற்றும் அனுஜித் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.அபிஜித் 11ம் வகுப்பும், அனுஜித் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சனல் குமார் காங்கிரஸ் ஆதரவாளர் ஆவார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருங்கடைவிளை வார்டில் இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் தலைமை மறுத்து விட்டது. இதையடுத்து சனல் குமார் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்தார். ஆனால் இதற்கு தற்போது பெருங்கடைவிளை பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுரேந்திரன் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சுரேந்திரனும், சனல் குமாரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர் போட்டியிட்டால் அந்த சமூகத்தின் வாக்குகள் தனக்கு கிடைக்காது என சுரேந்திரன் கருதியது தான் இதற்கு காரணமாகும். போட்டியிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று சனல் குமாரிடம் சுரேந்திரன் கூறினார்.

ஆனால் வாபஸ் பெற அவர் மறுத்து விட்டார். இது சுரேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த நான்கு மாதங்களாக சனல் குமார் மின்வாரிய கட்டணத்தை கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ₹ 1496 பாக்கித் தொகையை கட்ட வேண்டும் என்று கூறி மின்வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அவர் மின் கட்டணத்தை கட்டவில்லை. அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மின்வாரிய ஊழியர்கள் அவரது வீட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதற்கு சுரேந்திரன் தான் காரணம் என்று சனல் குமார் கருதினார்.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் சுரேந்திரனின் வீட்டுக்கு சென்ற அவர், இது தொடர்பாக சுரேந்திரனிடம் தகராறு செய்தார். தொடர்ந்து அவரது வீட்டின் முன் வைத்து சனல் குமார் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேந்திரன் கூறியதால் தான் மின்வாரிய ஊழியர்கள் தன்னுடைய வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர் என்று இறப்பதற்கு முன் சனல் குமார் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You'r reading ₹ 1496 பாக்கிக்காக மின் இணைப்பு துண்டிப்பு மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை