கேரளாவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி படையெடுக்கும் காமெடி நடிகர்கள்

by Nishanth, Feb 18, 2021, 18:09 PM IST

கேரளாவில் கடந்த சில தினங்களாக காமெடி நடிகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தர்மஜன் போல்காட்டி, ரமேஷ் பிஷாரடி மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் சமீபத்தில் இக்கட்சியில் இணைந்துள்ளனர்.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் இப்போதே மும்முரமாக ஈடுபடத் தொடங்கி விட்டன.

கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும், வேட்பாளர்கள் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் போது தான் நடிகர்கள் உட்பட முக்கிய பிரபலங்களுக்கு அரசியல் கட்சிகள் வலை வீசும். கேரளாவில் பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களால் அரசியலில் அவ்வளவாக சோபிக்க முடியாது. நடிகர்கள் இன்னசென்ட், முகேஷ் மற்றும் கணேஷ் குமார் ஆகியோரால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அதிலும் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இன்னசென்ட் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபியாலும் வெற்றி பெற முடியவில்லை.இந்நிலையில் கேரளாவில் சில மலையாள நடிகர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர். மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகரான தர்மரஜன் போல்காட்டி சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார். கட்சி கேட்டுக் கொண்டால் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்துக் கூட காங்கிரஸ் சார்பில் போட்டியிட, தான் தயாராக இருப்பதாக கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ரமேஷ் பிஷாரடி என்ற காமெடி நடிகரும், மலையாள நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான இடைவேளை பாபுவும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். நாங்கள் மட்டுமல்ல, இன்னும் பல நடிகர்கள் காங்கிரசில் இணைவார்கள் என்று நடிகர் தர்மஜன் போல்காட்டி கூறினார்.

You'r reading கேரளாவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி படையெடுக்கும் காமெடி நடிகர்கள் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை