இடுக்கியில் பிளஸ் டூ மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காதல் விவகாரம் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மாணவியைக் குத்திக் கொன்ற நெருங்கிய உறவினரான அனுராஜ் (23) என்ற வாலிபர் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளிவாசல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் ரேஷ்மா (17). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கேரளாவில் 10 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நேற்று ரேஷ்மா பள்ளிக்குச் சென்றிருந்தார்.
ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பெற்றோர் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரேஷ்மாவின் தந்தை ராஜேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் பள்ளி முடிந்த பின்னர் ரேஷ்மா ஒரு வாலிபருடன் ஒன்றாக நடந்து செல்லும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி கிடைத்தது. பள்ளியின் அருகேயும், அங்குள்ள சாலையில் வைக்கப்பட்டு இருந்த கேமராவிலும் இருவரும் நடந்து செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரேஷ்மாவுடன் சென்றது நெருங்கிய உறவினரான அனுராஜ் (23) என கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே அங்குள்ள ஒரு நீரேற்று நிலையம் அருகே முட்புதரில் ரேஷ்மாவின் உடல் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கிடந்த இடத்தில் இருந்து அனுராஜின் செல்போன் மற்றும் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷ்மாவை கொலை செய்தது அனுராஜ் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் காதல் விவகாரம் தான் இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ரேஷ்மாவும், அனுராஜும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் ரேஷ்மாவின் வீட்டினருக்குத் தெரிய வந்தது. இவர்களது காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது அனுராஜுக்கு தெரிய வந்தது. எனவே ரேஷ்மா வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அனுராஜ் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.