கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு

by Nishanth, Feb 20, 2021, 20:50 PM IST

கேரளா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மரண எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,993 ஆகும். கடந்த 3 வாரங்களில் இது சற்று அதிக எண்ணிக்கையாகும். கடந்த சில தினங்களுக்கு முன் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விடக் குறைவாக இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துள்ளது. 101 பேர் மரணமடைந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது தான் இதற்குக் காரணமாகும்.

இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாகச் சராசரியாக 4,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. இன்று 4,650 பேருக்குப் புதிதாக நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,064 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளாவில் பல்வேறு மருத்துவமனைகளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது. புனே, நாசிக், நாக்பூர், அமராவதி உள்பட 8 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை