இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. 4வது டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத்தில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. டி20 போட்டித் தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் ரிஷப் பந்த் மீண்டும் டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஜார்க்கண்ட் வீரர் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்துள்ளார். மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ராகுல் தெவாத்தியா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள முகம்மது ஷமி அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த புவனேஸ்வர் குமார் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வீரர்கள் விவரம்:
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (உதவி கேப்டன்), கே.எல். ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாத்தியா, நடராஜன், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் செய்னி ஷார்துல் தாகூர்.