மேற்கு வங்கம், அசாம் உள்பட 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி அதிரடி குறைப்பு தமிழ்நாட்டில் குறைக்கப்படுமா?

by Nishanth, Feb 22, 2021, 17:20 PM IST

மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும் வரியைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 13 நாட்கள் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வந்தது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டி விட்டது. இந்திய வரலாற்றிலேயே பெட்ரோல் விலை 100ஐ தாண்டுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை ₹ 90 க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கும் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஒரு முக்கியமான பிரச்சினை தான் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயா ஆகிய நான்கு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் தான் மிக அதிகமாக பெட்ரோலுக்கு 7.40 ரூபாயும், டீசலுக்கு 7.10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கூடுதலாக விதிக்கப்பட்ட வரியில் 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 91.78 ரூபாயாக உள்ளது. ஷில்லாங்கில் 86.87 ரூபாயும், கவுகாத்தியில் 87.24 ரூபாயும், ஜெய்ப்பூரில் 97.10 ரூபாயும் உள்ளது.

கொல்கத்தாவில் டீசல் லிட்டருக்கு 84.56 ரூபாய்க்கும், ஷில்லாங்கில் 80.24 ரூபாய்க்கும், கவுகாத்தியில் 81.49 ரூபாய்க்கும், ஜெய்ப்பூரில் 89.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 90.58 ரூபாய்க்கும், டீசல் 80.97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் பெட்ரோலுக்கு 4.28 ரூபாயும், டீசலுக்கு 4.49 ரூபாயும் டெல்லியில் அதிகரித்துள்ளது. நான்கு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்பட்டதைப் போலத் தமிழ்நாட்டிலும் விலை குறைக்கப்படுமா எனப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

You'r reading மேற்கு வங்கம், அசாம் உள்பட 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி அதிரடி குறைப்பு தமிழ்நாட்டில் குறைக்கப்படுமா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை