கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்படச் சுகாதாரத் துறை ஊழியர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் போலீசார் உட்பட நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை குறிப்பிட்டு சொல்லும்படி இந்த தடுப்பூசிகளுக்குப் பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படவில்லை. இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஒருவர் தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா பாதித்து இறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த மிதா மோகன் என்ற இந்த மாணவி கண்ணூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கண்ணூர் மருத்துவமனையில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதன் பின்னர் இவருக்குத் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இது குணமாகாததால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன் மிதா மோகன் மரணமடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டாக்டர்களின் அலட்சியம் தான் தங்களது மகளின் மரணத்திற்குக் காரணம் என்று கூறி மிதா மோகனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் தங்கள் மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதுதொடர்பாக டாக்டர்களிடம் கூறிய போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக சிகிச்சை அளிக்கவும் முன்வரவில்லை. மிதா மோகனுடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் சிலருக்கும் இதே போல உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் தங்களது மகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிதா மோகனின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த புகார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். கண்ணூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.