கொரோனா நெகட்டிவ் சான்றிதழுக்காக கட்டிப்போட்டு பலாத்காரம்... பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

by Nishanth, Feb 23, 2021, 09:15 AM IST

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்க சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பொய்யான புகார் என தெரிய வந்ததை தொடர்ந்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நவுஷாத் என்ற அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்குவதற்காகச் சென்ற ஒரு இளம்பெண்ணைச் சுகாதார ஆய்வாளர் கட்டிலில் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த சம்பவமும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் என்பவரைக் கைது செய்தனர். இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்த போதிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் 77 நாட்கள் சிறையில் இருந்த பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையே போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த இளம்பெண்ணின் புகார் பொய்யானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் மீது கொடுத்தது பொய்யான புகார் தான் என்று அவரும் ஒப்புக் கொண்டார். உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாகவே பொய் புகார் கொடுத்ததாக அவர் போலீசில் தெரிவித்தார். இதற்கிடையே சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சுகாதார ஆய்வாளர் செய்தது தவறு தான் என்றாலும், அவருக்கு எதிராகப் பொய் புகார் கொடுத்ததின் காரணமாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது களங்கம் ஏற்பட்டு விட்டது. எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You'r reading கொரோனா நெகட்டிவ் சான்றிதழுக்காக கட்டிப்போட்டு பலாத்காரம்... பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை