இந்தியா, இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்

by Nishanth, Feb 23, 2021, 09:26 AM IST

இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.இந்தியா, இங்கிலாந்து இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், அடுத்த போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. மேலும் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதைவிட இந்த போட்டிக்கு மேலும் ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உள்ளது.இந்த டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

மொட்டேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தின் கொள்ளளவு 1,10,000 ஆகும். உலகிலுள்ள வேறு எந்த கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் இவ்வளவு பேருக்கு அமர்ந்து போட்டியை பார்க்க முடியாது. இது தவிர இந்த ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவில் விளையாடும் போது பந்தின் நிழல் மைதானத்தில் விழாமல் இருப்பதற்காக எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் 11 பிட்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. டிரெஸ்ஸிங் அறையோடு சேர்ந்து உடற் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் புல்லுக்கு கீழே மணல் தூவப்பட்டுள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் உடனடியாக தண்ணீர் வெளியேறுதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்தின் மொத்த பரப்பளவு 63 ஏக்கர் ஆகும். ஸ்டேடியத்தோடு சேர்ந்துள்ள கிளப் ஹவுசில் 50 டீலக்ஸ் அறைகளும், 5 சூட் அறைகளும் உள்ளன. பெவிலியன் வசதியுள்ள இரண்டு பயிற்சி மைதானங்கள், பந்து வீசும் எந்திர வசதியுள்ள 6 உள்ளரங்கு பிட்சுகள் ஆகியவையும் உள்ளன. இந்த பிரம்மாண்ட ஸ்டேடியத்தை நேற்று இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஆச்சரியத்துடன் சுற்றிப் பார்த்தனர். இந்த ஸ்டேடியத்தில் தான் கடந்த வருடம் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாளை தொடங்க உள்ள போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் 100-வது போட்டியாகும்.

You'r reading இந்தியா, இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை