இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த பிப்.11ம் தேதியன்று இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேராக இருந்தது.
ஆனால், 10 நாளில் இது ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிகிச்சையில் உள்ளவர்களில் 74 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய், ஆரம்பத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை.தமிழகத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4100 என்ற அளவில் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் நீடிக்கிறது.
தமிழகத்தில் 100 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தினமும் சராசரியாக 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தொற்று எங்கிருந்து பரவுகிறது எனக் கண்டறிந்து அங்குப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.