பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பச்சைக் கொடி

by Nishanth, Feb 23, 2021, 18:21 PM IST

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலிடம் மத்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாயாக குறையும்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் வரை தொடர்ந்து 13 நாட்கள் தினமும் விலை அதிகரித்து வந்தது. இரண்டு நாட்கள் இடைவேளைக்கு பின்னர் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பலசரக்கு பொருட்கள், காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிளில் சென்று போராட்டம் நடத்தினார். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கிறது. இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலிடம் பலமுறை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும். விரைவில் இவற்றின் விலை குறையும் என்று கூறினார். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாயாகவும், டீசல் விலை 45 ரூபாயாகவும் குறையும்.

You'r reading பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பச்சைக் கொடி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை