குடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்

by Nishanth, Feb 26, 2021, 11:07 AM IST

குடிபோதையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற பின்னர் மனைவியின் உடலுக்கு அருகேயே விடியும் வரை படுத்துத் தூங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி அருகே நடந்துள்ளது.டெல்லி அருகே உள்ள புராடி சந்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவரது மனைவி ஹாஷிகா (30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உண்டு. ராஜ்குமார் போட்டோ கிராபராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. குடிபோதையில் அடிக்கடி வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ராஜ்குமார் குடும்பத்துடன் அங்கு உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக அவருக்கு அதிகமாக வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை வீட்டை காலி செய்து விட்டு மனைவியின் வீட்டுக்குச் சென்று விட்டார்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜ்குமார் வழக்கம் போலக் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் ஹாஷிகா அவரிடம் தகராறு செய்தார். பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். குடிபோதையில் இருந்த ராஜ்குமார், ஹாஷிகா தூங்கிய பின் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் மனைவியின் உடல் அருகே ராஜ்குமார் படுத்துத் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது தான் மனைவி இறந்து கிடந்தது அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் நைசாக அங்கிருந்து தப்பிச் சென்றார். காலை நீண்ட நேரமாகியும் ஹாஷிகா எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஹாஷிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து தப்பி ஓடிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading குடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை