டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?

by Nishanth, Feb 26, 2021, 12:14 PM IST

டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இந்த மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் தேர்தலை எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநில அதிகாரிகளுடன் இணை தேர்தல் ஆணையாளர் சுதீப் ஜெயின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் பின்னர் அடுத்த வாரத்தில் இந்த 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மார்ச் 3ம் தேதி தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்குத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாகத் தேர்தல் நடத்தப்பட உள்ள 5 மாநில பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை