கொரோனா தடுப்பூசி மையங்களில் பிரதமர் மோடி படத்தை அகற்றுமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து விட்டாலும் தற்போது கூட்டணி அமைத்து மம்தாவை எதிர்த்து வருகின்றன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இதனால், திரிணாமுல் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கொரோனா தடுப்பூசி மையங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, அரசு செலவில் பிரதமர், முதல்வர் படங்களை பொது இடங்களில் வைக்கக் கூடாது. எனவே, பிரதமர் மோடியின் படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி மையங்களில் இருந்து பிரதமர் மோடி படங்களை அகற்றுமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.