“அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் ஜாக்கிரதை” – அதிர்ச்சி தகவல்

by Ari, Apr 26, 2021, 15:18 PM IST

நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று வீரியத்துடன் பரவும் என்றும், தினசரி பாதிப்பு நான்கரை லட்சத்தை கடக்கும் எனவும் கான்பூர் ஐ.ஐ.டி கணித்துள்ளது.

ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2812 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒருலட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 832 பேரும், டெல்லியில் 350 பேரும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 14 கோடியே 19 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் சூழலில் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தியாவின் கொரோனா பாதிப்பு, மே மாதம் 15ம் தேதி வரை நாள்தோறும் புதிய உச்சத்தை தொடும் என்றும் மருத்துவமனைகளில் சிகிக்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 48 லட்சமாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு அடுத்த 10 நாட்களில் 4 லட்சத்து 40 ஆயிரமாக உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 15ம் தேதிக்கும் பிறகு, பாதிப்பு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகளும் இதேமுறையில் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிட்டுள்ளதாக தெரிவித்த விஞ்ஞானிகள், இந்த தரவுகள் மத்திய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

You'r reading “அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் ஜாக்கிரதை” – அதிர்ச்சி தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை