இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று தொடங்கிய முதல் 5 மாதங்களை ஒப்பிடும் போது கடந்த வாரம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம், இந்தியாவில் கொரோனாவின் மோசமான சூழலை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் கவலை தெரிவித்தார். முக்கியமான உபகரணங்கள் வழங்குவது, விநியோகம் செய்வது என எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என கூறினார்.
தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் (பி.1.617) இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், ஏப்ரல் 27-ந் தேதி வரையில், 17 நாடுகளில் உருமாறிய இந்திய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இன்புளூவன்சா வைரஸ்களின் மரபணு தரவுகளை அளிக்கிற ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி. என்னும் உலகளாவிய அறிவியல் முயற்சி மற்றும் முதன்மை மூலத்தில் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.