இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தினசரி பாதிப்பு மூன்றரை லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பது வேதனை அளிக்கும் செய்தியாக காணப்படுகிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொமொரு சர்ச்சைக்குரிய விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் (ஏப்ரல் 2021) உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடந்தது. அப்போது தேர்தல் பணிக்காக சென்றிருந்த ஆசிரியர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் 577 பேர் உயிரிழந்தனர் என மாநில அரசு ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இது தொடர்பான விரிவான தகவலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.