126 இடங்களைக் கொண்ட அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை பெற்றால் பெரும்பான்மை. அதனை பாஜக கூட்டணி, எளிதில் கைப்பற்றிவிட்டது. இதற்கிடையே அங்கு தற்போது, மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
தற்போது முதல்வராக இருக்கக் கூடிய பாஜகவின் சர்பானந்த சோனாவால் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. அவருக்கு அடுத்த இடத்தில் போட்டியில் இருக்கும் மனிதர் ஹெமாதந்த் பிஸ்வாஸ். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகாய் வலதுகரமாக அறியப்பட்டவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிவகை செய்தவர். இதனால் அவர்தான் முதல்வராக வரவேண்டும் என்ற குரல்கள் கடந்த சில மாதங்களாகவே கட்சிக்குள்ளும் கூட மிக சத்தமாக கேட்டு வருகின்றன. இதனால் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்கிற தலைவலியில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது. விடை இன்னும் சில தினங்களில் கிடைத்துவிடும்.