சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நெருங்கிய நிலையில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு நீண்ட இழுபறிக்கு பிறகு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில், ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்பட 73 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 7 முனைப் போட்டியாக இந்த இடைத்தேர்தல் களைகட்டும் என்ற நிலையில், நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்தது பொது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும், தேர்தலில் வெற்றிப்பெற கட்சிகள் தயாராகி வரும் நிலையில், வரும் 12ம் தேதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அதே தேதியில் துணை ராணுவப் படை வர உள்ளதாகவும் கூறப்பட்டது. இதை தவிர, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்குவதற்கு தடை விதித்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.