மக்களின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு, திறக்கப்பட்ட புதுச்சேரி நெடுங்காடு மதுபானக்கடையை இன்றே மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் இயங்கிவந்த சி.சி. & சி.சி.மதுபானக்கடையை காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
இதனை எதிர்த்து தேவமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நெடுங்காடு பகுதியில் உள்ள 35 குடும்பங்களில் மதுபழக்கத்திற்கு அடிமையாகி 20 பேர் உயிரிழந்ததால் அவர்கள் குடும்பத்தினர் ஆதரவற்றவர்களாக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொதுமக்களின் ஆட்சேபனை கடிதத்தை நிராகரித்த உடனேயே மதுபானக்கடையை அமைக்க அனுமதி வழங்கிய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்றும், திட்டமிட்ட மோசடி என்றும் தெரிவித்த நீதிபதிகள், அந்த கடையை இன்றே மூட உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து, புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சி.சி. & சி.சி. என்ற மதுபானக்கடை உரிமையாளர் பிரதாப் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27க்கு தள்ளிவைத்தனர்.