உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டிஜிபி நியமனம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி நியமனம் இருப்பதாகவும், உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
டிஜிபி பதவிக்கு வர வேண்டும் என விரும்பும் ஐபிஎஸ், அதிகாரிகள் பலர், அந்த பதவிக்கு வராமலேயே ஓய்வு பெற்றுவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மட்டுமே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி டிஜிபி நியமனங்களை மேற்கொள்வதாகவும், 29 மாநிலங்கள் அதை கடைபிடிப்பதில்லை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்". என விளக்கம் அளித்தார்.
“எனவே, தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய வழிகாட்டுதல்படியே டிஜிபி நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள சில வழிகாட்டுதல்களை, வருங்காலங்களில் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.