புதிய நெல் கொள்முதல் விலையால் அரை விழுக்காடு கூட லாபம் கிடைக்காது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இப்போது கொள்முதல் விலை சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு பெருமிதப்பட்டுக் கொள்வதைப் போல வேளாண் விளைபொருட்களுக்கு 50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைப் பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்துக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று பாரதிய ஜனதாக் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதிய கொள்முதல் விலைகளை நேற்று அறிவித்த மத்திய அரசு, அவற்றில் உற்பத்திச் செலவுடன் 50% லாபமும் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 14 வகையான விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து தான் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், புள்ளி விவரப் பயன்பாட்டுக்குத் தான் இது பொருத்தமாக இருக்குமே தவிர, எதார்த்தத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாது.
நெல்லுக்கான உற்பத்திச் செலவாக அரசால் கணக்கிடப்பட்டுள்ள ரூ.1166 என்பது மிகவும் குறைவாகும். தமிழ்நாட்டில் நெல் உற்பத்திக்கான செலவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தான் கணக்கிடுகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1549 செலவாகிறது. இதுவும் 2015-ஆம் ஆண்டு மதிப்பு தான்.
ஆண்டுக்கு 5% உற்பத்தி செலவு அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திச் செலவு ரூ.1781 ஆக அதிகரித்திருக்க வேண்டும். அத்துடன் 50% லாபம் சேர்த்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ. 2671 ஆக அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், அதை சுமார் 1000 ரூபாய் குறைவாகவே கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லுக்கான உற்பத்திச் செலவை விட கொள்முதல் விலை ரூ.31 குறைவாக இருக்கும் போது, உழவர்களுக்கு எவ்வாறு 50% இலாபம் கிடைக்கும்; சுமார் 2% நஷ்டம் ஏற்படும் என்பது தானே உண்மை.
நெல்லுக்கான கொள்முதல் விலை இவ்வளவு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் உற்பத்திச் செலவு திட்டமிட்டு குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தான். உற்பத்தி செலவைக் கணக்கிட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறை உள்ளது.
அதன்படி, நெல்லுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது வேலையாள் கூலி, மாட்டு கூலி, இயந்திர சக்தி, விதை, உரங்கள் மற்றும் எரு, பயிர் பாதுகாப்பு செலவுகள், நீர் பாய்ச்சல் செலவுகள் ஆகிய செயல்பாட்டுச் செலவுகளுடன் நிலையான செலவாக 15%, நிர்வாகச் செலவாக 10% சேர்க்கப்பட வேண்டும்.
ஆனால், செயல்பாட்டுச் செலவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட மத்திய அரசு, நிலையான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளாததால் தான் உற்பத்திச் செலவு குறைவாக உள்ளது. இந்த செலவுகளும் கணக்கில் சேர்க்கப்பட்டால், மத்திய அரசின் கணக்குப்படியே ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1475 ஆக இருக்கும். அதனடிப்படையில் கொள்முதல் விலை ரூ.2213 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது தமிழக மதிப்பை விட குறைவு என்றாலும் ஓரளவு லாபம் கிடைக்கும் விலையாக இருந்திருக்கும்.
நிலக்கடலை தவிர மற்ற பயிர்களின் உற்பத்திச் செலவுகள் அனைத்துமே மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாசிப்பயறு விலை குவிண்டாலுக்கு ரூ.1400 அளவுக்கும், சூரியகாந்தி எண்ணெய் வித்து ரூ.1288 அளவுக்கும், பருத்தி ரூ.1130 அளவுக்கும், ராகி விலை ரூ.997 அளவுக்கும் உயர்த்தப்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும். ஆனால், அவற்றின் விலையும் உண்மையான உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும். 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிப்பதாகக் கூறி விட்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் காட்டி, அதனடிப்படையில் கொள்முதல் விலை நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மத்திய அரசு உற்பத்திச் செலவுகளில் நிலையான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றையும் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். மற்றொரு புறம் தமிழக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நெல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திச் செலவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் எவ்வளவு தொகை நிர்ணயித்துள்ளதோ, அந்த பட்டியலை மத்திய அரசிடம் அளித்து, அதனுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை தீர்மானிக்கும்படி வலியுறுத்த வேண்டும். அதை ஏற்க மத்திய அரசு மறுத்தால், வித்தியாசத் தொகையை தமிழக அரசே ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.2500 கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்" என அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.