மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கான ஜூலை மாத பங்கு நீரை காவிரியில் இருந்து திறக்க அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார். இதனை அடுத்து, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், “காவிரி தீர்ப்பாய உத்தரவுப்படி, இதுவரை தமிழகத்திற்கு 20 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் தமிழகத்திற்கு மீதமுள்ள தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை." என்றார்.
“தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று குழுவின் உறுப்பினர்கள் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்கள். கர்நாடகாவுக்கு அதில் ஆட்சேபணை ஏதும் இல்லை. கர்நாடகா அரசு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும்” என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
"மேலும், மேகதாது அணை திட்டம் என்பது கட்டாயம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் அணை கட்டுவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெறுவது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.