உலக காதலர்களின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால், தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் சின்னமாகி நிற்கிறது. கண்ணைக்கவரும் இந்த பளிங்கு கல் மஹால் தற்போது பழுப்பு நிறமேறி தனது சுய அழகையே இழந்து நிற்கிறது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இத்தனைப் பெருமைமிகு அடையாளம், இன்று தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பதற்கான காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த பொது நல வழக்கில், ‘தாஜ்மஹாலின் அழகைப் பாதுகாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதிகாரிகளின் மெத்தனப் போக்கின் காரணமாகத் தான் இன்று தாஜ்மஹால் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் சின்னமாகி நிற்கிறது’ என கண்டனம் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், தாஜ்மஹால் பாதுகாப்பு மண்டல் தலைவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.