கனத்த இதயத்துடன் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உருக்கமாக தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்றம் நீதிபதியாக மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக வரும் 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், இந்திரா பானார்ஜி தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஓராண்டு 4 மாத காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி, "அச்சமும், பாரபட்சமும் இன்றி தன் கடமையை நிறைவேற்றினேன். இதில் வழக்கறிஞர்களுக்கும் பங்கு இருக்கிறது"
"உயர்ந்த பாரம்பரியம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு நீதிபதிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சிறந்த நீதிமன்றமாக இருக்கும். தான் பதவி வகித்த காலத்தில் ஒரு நாள் கூட வழக்கறிஞர் நீதிமன்றத்தை புறக்கணிக்கவில்லை" என பெருமிதம் தெரிவித்தார்.
"கனத்த இதயத்துடன் டெல்லி செல்லும் தனது இதயம், எப்பொழுதும் தமிழகத்திலேயே இருக்கும். சென்னை உயர்நீதிமன்றத்தின் கொடியை உயர பறக்க வைப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" என நீதிபதி இந்திரா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சதை சந்தித்த போது, நீதித்துறைக்கு உரிய நேரத்தில் நிதி ஒதுக்கி திட்டங்கள் முடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு, முதலமைச்சர், நீதித்துறை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதி அளித்ததாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.