திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 27ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்து வந்தது.
இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும், இன்று காலை உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்படுத்துவது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு, உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டுள்ளார். இவருக்கு முன்பாக, துரைமுருகன், தயாளு அம்மாள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.