திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய விவகாரத்தில், தமக்கும், வழக்கறிஞருக்கும் அக்கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த டிராபிக் ராமசாமி, சிறுமுகை கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு அளித்தார். பின்னர் பேசிய அவர், “மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்த உத்தரவு நகல் வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். ஏற்கனவே போட்ட வழக்கை நான் இதுவரை வாபஸ் பெறவில்லை.”
“கடற்கரை சட்டப்படி 500 மீட்டர் எல்லைக்குள் நினைடம் அமைப்பது முற்றிலும் தவறு. மெரினா கடற்கரை கல்லரையா அல்லது சமாதிகள் அமைக்கப்படும் இடமா?. நான் ஏற்கனவே தொடுத்துள்ள வழக்கில் அண்ணா சமாதி எம்ஜிஆர் சமாதி ஜெயலலிதா சமாதி ஆகியவைகளை அப்புறப்படுத்தி கிண்டியில் அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள செய்திருந்தேன்”
“அந்த வழக்கின் தீர்ப்பு வரவில்லை. அதற்குள் கருணாநிதி அவர்கள் சமாதியும் மெரினா கடற்கரைக்குள் அமைக்கப்பட்டு விட்டது. இந்த சமாதிகளை மெரினாவில் இருந்து அப்புறப்படுத்தாமல் விடமாட்டேன். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதும், தம்மையும், தமது தரப்பு வழக்கறிஞரையும் திமுக-வினர் மிரட்டுகின்றனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட டிராபிக் ராமசாமி, கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அறிவிப்பு விளம்பர பேனரை கிழிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் பேனரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் முக்கிய இடம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது.