மகாராஷ்டிரா காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பிரதமர் மோடியை கொல்ல சதி எனக் கூறி சமூக ஆர்வலர்கள் 5 பேரை கைது செய்த மகாராஷ்ரா காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Supreme Court

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 5 மாவோயிஸ்ட்களை புனே காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் இருந்து கடிதம் ஒன்றையும் புனே போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த கடிதத்தில் "ராஜீவ் காந்தி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட போது கொல்லப்பட்டது போல், பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொல்லவும், பாஜக அரசு தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது" என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.

5 பேர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், மும்பையில் சோதனை நடத்திய காவல்துறை, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா உள்பட 5 பேரை கைது செய்தது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்தன. கருத்துரிமை பறிக்கும் செயல் என கண்டனத்தை பதிவு செய்தன. இந்த நடவடிக்கையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

5 பேரின் வீட்டுக்காவலை வருகிற 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மிக முக்கியமாக கருதப்படும் ஆவணங்களை மகாராஷ்டிரா போலீசார், பகிரங்கமாக வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.