சர்வதேச எல்லைப்பகுதி காஷ்மீரில் இந்திய ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் பாகிஸ்தான் ராணுவம் படுகொலை செய்துள்ளது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகறது.
காஷ்மீர் மாநிலம் ராம்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சர்வதேச எல்லைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைமை காவலர் நரேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை இந்திய வீரர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சர்வதேச எல்லைப்பகுதி என்பதால், தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவரைக் கண்டுபிடிக்க உதவும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட தொலைவு மட்டுமே தேடிய பாகிஸ்தான் வீரர்கள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால், தேடமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் குண்டுகாயத்துடன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர் உடல் எல்லைப்பகுதியில் கிடந்ததை இந்திய படையினர் கண்டுபிடித்தனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய வீரர் நரேந்திரகுமாரின் உடல் குண்டுகாயத்துடனும், கழுத்து அறுக்கப்பட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. நரேந்திரகுமாரைத் தேடுகிறோம் தாக்குதல் நடத்தாதீர்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தும் அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் பிஎஸ்எப் வீரர்கள் அதிரடியாக எல்லைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, நரேந்திர குமார் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தனர்.
எல்லைப்பகுதியில் இந்திய வீரர் ஒருவர் கழுத்தை அறுத்து, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும் என்று வீரர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் மக்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.