ராஜஸ்தான் மாநிலத்தில் 31 மலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மலைப்பகுதிகளை ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்திருந்தது. இக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில் ராஜஸ்தானில் 20% மலைப்பகுதிகள் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 121 மலைகளில் 31 மலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் மலைகளில் நடைபெறும் சட்டவிரோதமாக சுரங்கம் அமைக்கும் வேலைகள்தான் இதற்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் எதிரொலியாக 115.34 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகளை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த நடவடிக்கை வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதிகளை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டிய நீதிமன்றம் டெல்லி அருகே இருக்கும் மலைப்பகுதிகள் அழிக்கப்பட்டதும் டெல்லியின் காற்று மாசுக்கு காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தது.
“இப்போது 31 மலைகள் மாயமாகிவிட்டன. இப்படியே மலைகள் எல்லாம் காணாமல்போனால் நாடு என்ன ஆகும்? மனிதர்கள் மலையை தூக்கிச் கொண்டு செல்லும் அனுமார்களாக மாறிவிட்டார்களா?” என்றும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
சுரங்கப் பணிகள் மூலம் ரூ.5000 கோடி வருவாய் ஈட்டும் ராஜஸ்தான் அரசு அதற்காக பொதுமக்களின் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.