லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பது கதர்சட்டையினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என 1980-ல் கருணாநிதி முழங்கினார். 2004-ல் இந்திராவின் மருமகளே... இந்தியாவின் திருமகளே என சோனியா காந்தியை முன்மொழிந்தார்.
இப்போது ராகுல் காந்தி அவர்களே வருக! நல்லாட்சி தருக! அவரது கரத்தை அனைத்து கட்சிகளும் இணைந்து வலுப்படுத்துவோம் என முன்மொழிகிறேன் என்றார். ஸ்டாலினின் இந்த பேச்சு காங்கிரஸ் தரப்பை அளவில்லா மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஸ்டாலின் இப்படி முழங்கிய போது மேடையில் இருந்த ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. கூட்டணி விவகாரத்தில் திமுக எத்தனை இடம் கொடுக்குமோ என பெரும் பீதியில் இருந்து வந்தது காங்கிரஸ்.
இப்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பதால் நிச்சயம் கவுரமான தொகுதிகள் தங்களுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸுக்கு வந்துவிட்டதாம்.