காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகம் தீவிரமாக உள்ளது. அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இவ்விவகாரத்தில் ஒன்று கூடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர்.
தமிழகத் தரப்பில் பெயரளவுக்குத்தான் எதிர்ப்பு காட்டப்படுகிறதே தவிர அனைத்துக் கட்சிகளை ஒன்று திரட்டி போராடுவதை தமிழக அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மேகதாது விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதே இதற்கு காரணம்.
இந்நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளில் அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுப்பதற்கு எதிர்க்குரல் எழுப்ப கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவெடுத்து இன்று காலை டெல்லியில் கூட்டம் நடத்தினர். அதிமுக எம்.பி.க்களுக்கு பதிலடியாக நாடாளுமன்ற அவைகளில் மேகதாது அணை கட்ட ஆதரவாக கர்நாடக எம்.பி.க்கள் ஒருமித்த குரல் எழுப்புவது என்றும், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது. இதனால் அணை கட்டியே தீருவோம். இந்த அணையால் தமிழகத்திற்கும் நன்மை தான் என்றார். மாநில பிரச்னைகளுக்காக அண்டை மாநில கட்சிகள் ஓரணியில் திரண்டு குரல் எழுப்புவது போல் தமிழக கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சுமத்தும் காலம் எப்பொழுது மாறுமோ?