பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன்களை பட்டியலிடுமாறு மத்திய அரசுக்கு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் பஸ்வானின் மகன் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பாகியுள்ளது.
ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கார் மாநிலங்களில் பா.ஜ.க.தோல்வியால் அதன் கூட்டணிக் கட்சிகள் கலகக் குரல் எழுப்பி வருகின்றன. பீகாரில் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. மத்திய அமைச்சராக இருந்த அக்கட்சித் தலைவர் உபேந்திரா குஷ்வாகா பதவியையும் ராஜினாமா செய்து விட்டு தற்போது காங் இரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இணைந்து விட்டார். தற்போது மத்திய அமைச்சராக உள்ள பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடிக்கிறது.
பல கட்ட பேச்சு நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பஸ்வானும், அவருடைய மகனும் எம்.பி.யுமான சிராக் பஸ்வான் ஆகியோர் பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் பண மதிப்பிழப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு பஸ் வானின் மகன் சிராக் பஸ்வான் எழுதியதாக் கூறப்படும் கடிதம் குறித்த தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த நன்மைகள் என்னென்ன? அந்தப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டால் வரும் தேர்தலில் மக்களிடம் எடுத்துச் சொல்லி தப்பிக்க முடியும் என்று சிராக் கடிதத்தில் கூறியுள்ளாராம்.