சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 12 பெண்களை பம்பையில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டுள்ளனர். ஐயப்பனை தரிசிக்காமல் நகர மாட்டோம் என பெண்களும் பிடிவாதமாக இருப்பதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 'மனிதி' என்ற அமைப்பின் 12 பெண்கள் செல்வி என்பவர் தலைமையில் மாலை அணிந்து நேற்று சபரிமலை புறப்பட்டனர். நேற்று மாலை மதுரையிலேயே இவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
தேனியிலும் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.தேனியிலிருந்து 12 வாகனங்களில் போலீசார் பாதுகாப்பளிக்க நிலக்கல் வழியாக இன்று காலை பம்பை வந்தடைந்தனர்.
இதையறிந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பெண் பக்தர்களை சன்னிதானம் நோக்கி மேலும் முன்னேற விடாமல் முற்றுகையிட்டு சரணம் ஐயப்பா கோஷமிட்டபடி தடுத்து நிறுத்தி போராட் டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பெண்களோ சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் செல்ல மாட்டோம் என பிடிவாதத்துடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சு நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை.
இதனால் சபரிமலையில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.