பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் உருவாகும் மெகா கூட்டணியை சீர்குலைக்கவே கே.சி.ஆர். 3-வது அணி முயற்சியை மேற்கொண்டுள்ளதாக காங்.குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ.க.வின் ஆதாயத்திற்காக மோடி - அமித்ஷாவின் ஏஜன்ட் தான் கே.சி.ஆர் என்றும் காங். விமர்சித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி முயற்சிகள் வேகமெடுத்துள்ளது. 3 மாநிலங்களில் பா.ஜ.க அரசு தோல்வியடைந்து காங்.அரசு அமைந்ததைத் தொடர்ந்து மெகா கூட்டணி அமைவது உறுதியாகிவிட்டது.
பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும் என சென்னையில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதனை மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் ரசிக்கவில்லை. இதனை சாக்காக வைத்து மீண்டும் 3-வது அணி முயற்சியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கையிலெடுத்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மே.வங்க முதல்வர் மம்தா ஆகியோரை நேற்றும், நேற்று முன் தினமும் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மம்தாவின் சந்திப்புக்குப் பின் பேசிய கே.சி.ஆர், 3-வது அணி முயற்சி முழு வேகம் எடுத்துள்ளதாகவும் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் பெடரல் கூட்டணி குறித்த வலுவான செயல் திட்டங்களுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். இன்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரையும் டெல்லியில் கே.சி.ஆர் சந்திக்க உள்ளார். இந்தக் கூட்டணிக்கு கே.சி.ஆரே தலைமையேற்கவும் விரும்புவதாகத் தெரிகிறது.
கே.சி.ஆரின் இந்த 3-வது அணி முயற்சி காங்கிரசை கோபமடையச் செய்துள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அணிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியை கே.சி.ஆர். சீர்குலைக்க முயற்சிக்கிறார். எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்படுகிறார். அமித் ஷா - மோடியின் ஏஜன்ட் தான் கே.சி.ஆர்.என காங். மூத்த தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கே.சி.ஆரின் சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளனர். எனவே 3-வது அணி என்ற சூழ்ச்சி வலையில் யாரும் விழமாட்டார்கள் என காங். செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்து வந்த கே.சி.ஆர். திடீரென உறவை முறித்துக் கொண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அமோக பெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலுடன் தான் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. பா.ஜ.க உடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்தால் பா.ஜ.க எதிர்ப்பு அலை தம்மையும் காவு வாங்கி விடுமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க கூட்டணியை முறித்தார்.6 மாதங்களுக்கு முன்பே சட்டப்பேரவை கலைத்து தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர் கே.சி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பா.ஜ.க வுடன் கூட்டணி வைக்காமலே எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பிளவுபடுத்தி பா.ஜ.க வுக்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.