'மக்கள் மன்றத்தில் இருந்து அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தால், ரஜினி கட்சியில் சேரக் கூடிய முக்கிய நபர்களாக அமமுக பொறுப்பாளர்கள் இருப்பார்கள்' எனப் பட்டிமன்றமே நடந்து வருகிறது. அண்ணன் ரஜினி என தங்க.தமிழ்ச்செல்வன் அழைத்ததில் இருந்தே இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது வம்பு, வழக்கு வருவது சகஜமாகவே இருந்துள்ளது. வீரப்பன் படுகொலைக்குப் பிறகு, ஜெயலலிதாவை தைரியலட்சுமி எனப் புகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் இருவரும் நட்புடன் இருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போது ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபரும் ரஜினிதான். இந்த நிலையில் தினகரனின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார் ரஜினி. இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் பிரமுகர்கள் கருதுவது இதைத்தான். செந்தில் பாலாஜியைப் போல ரஜினி கட்சி தொடங்கினால் அமமுகவினர் அவர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்பதால்தான்.
அப்படியே போனாலும் அதில் முதல் நபராக வெற்றிவேல் இருப்பாராம். இதற்கு முன்னுதாரணமாக ஜெயலலிதா இருந்தபோது நடந்த சம்பவத்தையும் சொல்கிறார்கள். கர்நாடக உயர்நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, 2015 மே மாதம் ஐந்தாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வந்திருந்தார்.
சிரித்த முகத்துடன் நிகழ்ச்சி முழுவதையும் அமர்ந்து பார்த்தார் ரஜினி. விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, கூட்டணி கட்சித் தலைவர்கள் செ.கு.தமிழரசன், கதிரவன், தனியரசு மற்றும் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, விவேக், கார்த்தி, அர்ஜுன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சபாநாயகர் தனபால், ஐகோர்ட் நீதிபதிகள் விமலா, எஸ்.மணிக்குமார், மேயர் சைதை துரைசாமி, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம், இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் சீனிவாசன் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், போலீஸ் அதிகாரிகள் எனத் திரளாகக் கலந்து கொண்டனர்.
இத்தனை பேர் புடைசூழ இருக்கும்போது, ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றிவேல், திடீரென ரஜினியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இந்த சம்பவத்தை அதிமுகவினர் அதிர்ச்சியோடு பார்த்தனர். 'வெற்றிவேல் தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்கிறார்' என அப்போதே விமர்சனம் கிளம்பியது. இதைத்தான் முக்கியமான காரணமாகச் சொல்கிறார்கள் அமமுகவினர்.