ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு தூத்துக்குடியில் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இப்போராட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு முடிவில் சில நிபந்தனைகளுடன் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக பாத்திமா பாபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்ததுடன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்தது வேதாந்தா குழுமம். இந்த வழக்கு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் வாதிட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.
மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கும் தடை விதித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.