மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் நகர மே வெறிச்சோடி காணப்படுகிறது. வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு செல்லும் பேருந்துகள் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒடிசா, பீகார், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் சாலைகளில் டயர்களை தீ வைத்துக் கொளுத்தி மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் எற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களிலும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. மற்ற நாட்களை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட போது திரிணாமுல் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நகர் முழுவதும் பேருந்துகள் ஒன்று கூட ஓடவில்லை. இதனால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.