மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை கிண்டல் செய்து 30 ஆயிரம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவடைந்த திட்டங்களின் திறப்பு விழா என படுபிஸியாகி விட்டார் பிரதமர் மோடி. இன்று மகாராஷ்டிரா செல்லும் மோடி மரத்வாடா பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் இன்றைய பயணத்தை சிவசேனா விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மரத்வாடா பகுதியில் பஞ்சத்தால் விவசாயிகள் செத்து மடிகின்றனர். ஆடு, மாடுகளும் உணவின்றி தவிக்கின்றன.
விவசாயிகளின் துயரத்தை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மராத்வாடா பகுதியில் 30 டன் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கி விவசாயிகளின் குறைகளை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கேட்டறிகிறார்.
சிவசேனாவின் இந்த ஏட்டிக்குப் போட்டி போராட்டத்தால் மகாராஷ்டிராவின் மரத்வாடா பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர சிவசேனா சமீப காலமாக கடும் நிபந்தனைகளை விதிப்பதால் இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல், மோதல் எழுந்துள்ளது. கூட்டணிக்கு வராவிட்டால் சிவசேனாவை தோற்கடிப்போம் என பா.ஜ. தலைவர் அமித்ஷா சில நாட்களுக்கு முன் சீறியிருந்தார். அதற்கு பதிலடியாக சிவசேனா மோடிக்கு எதிராக போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளது.