மும்பை அணியின் முக்கிய தூணும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்காவும் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகினார். மேலும், ``தனிப்பட்ட காரணங்களால் மலிங்காவால் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய பிறகு இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் மலிங்கா இருக்கப்போகிறார்" என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கூறியிருந்தது. மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பௌலர் ஜேம்ஸ் பட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்.
இந்நிலையில், மலிங்கா சென்றது குறித்து முதல்முறையாக ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில், ``மலிங்காவின் இடத்தை நிரப்புவது எளிது என்று நான் நினைக்கவில்லை. அவர் மும்பை அணியின் மேட்ச் வின்னர். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், நாங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், அதிலிருந்து எங்களை காப்பாற்றுவது மலிங்கா தான். அவரது அனுபவத்தை நிச்சயம் மிஸ் செய்வோம். அவர் இந்த ஆண்டு அணியின் ஒரு பகுதியாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
எங்களுக்கு ஜேம்ஸ் பாட்டின்சன், தவால் குல்கர்னி, மொஹ்சின் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் தான் மலிங்காவுக்கு பதிலான வீரர்களாக நாங்கள் பார்க்கிறோம். ஆனால் வெளிப்படையாக, மும்பை அணிக்கு மலிங்கா என்ன செய்தார் என்பது ஒப்பிட முடியாதது" எனக் கூறியிருக்கிறார்.