நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளுக்கு தோற்கடித்த பின்னர் சென்னை கேப்டன் தோனி, பஞ்சாப் வீரர்கள் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு போட்டி குறித்து 'கிளாஸ்' எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் அணியான சென்னை முதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியடைந்தது சென்னை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை அணி இனி அவ்வளவு தான் என்று கூறியவர்களும் உண்டு. ஆனால் நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளுக்கு தோற்கடித்து தாங்கள் இன்னும் வலிமையான அணி தான் என்பதை நிரூபித்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 178 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை ஒரு விக்கெட்டையும் இழக்காமல் வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன் 83 ரன்களும், டுப்ளசி 87 ரன்களும் குவித்தனர்.
இந்நிலையில் நேற்று போட்டி முடிந்த பின்னர் சென்னை கேப்டன் தோனி, பெங்களூர் கேப்டன் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரையும் தனித்தனியாக அழைத்து போட்டி குறித்து விவாதித்தார். அந்தப் போட்டியில் எப்படி விளையாடி இருக்க வேண்டும் என்று இருவருக்கும் அவர் கிளாஸ் எடுத்தார். இந்த வீடியோ ஐபிஎல்லின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'போட்டி குறித்து விவாதிக்க தோனியை விட சிறப்பான ஆள் வேறு யார் இருக்க முடியும்? எங்களுக்கு இது மிகவும் பிடித்துள்ளது' என்று ஐபிஎல் சார்பில் அந்த வீடியோவுக்கு முன்னுரையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே போட்டிக்குப் பின்னர் தோனி தங்களது அணி குறித்து கூறுகையில், 'பெரும்பாலும் ஒரே அணியை களத்தில் இறக்குவது என்ற தந்திரத்தைத் தான் நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம். எங்களது அணியின் பயிற்சியாளர் பிளெமிங்கும் அதற்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். அணியை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் ஒரு வழியிலும், கேப்டன் இன்னொரு வழியிலும் சென்றால் அணியின் நிலை சிக்கலாகி விடும். அப்போது தான் பிரச்சினைகளும் ஆரம்பிக்கும். இந்த விஷயத்தில் நானும் பயிற்சியாளர் பிளெம்மிங்கும் ஒரே எண்ணத்துடன் தான் செயல்பட்டு வருகிறோம் என்றார்.