கூகுள் பிளஸ் (Google+) பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் குறைபாடு நிகழ்ந்ததால் கூகுள் பிளஸ் சேவைகளை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டே முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், சேவைகள் நிறுத்தப்படும் சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. 2019 ஏப்ரல் 2ம் தேதி, கூகுள் பிளஸ் கணக்குகள் மூடப்படும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடு ஒன்றை கூகுள் கண்டறிந்தது. அக்குறைபாட்டினால் ஏறக்குறைய 5 கோடியே 25 லட்சம் பயனர்கள் பாதிப்புக்குள்ளாயினர் என்று கூறப்படுகிறது.
இப்பாதிப்பினால் கூகுள் பிளஸ் கணக்குகளை மூடும் முடிவுக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டது. 2019 பிப்ரவரி 4ம் தேதிக்கு பிறகு புதிதாக கூகுள்+ கணக்குகள் (profiles), பக்கங்கள் (pages), சமுதாயங்கள் (community)மற்றும் நிகழ்வுகளை (events) யாரும் உருவாக்க முடியாது. மேலும் ஏப்ரல் 2ம் தேதிக்கு முன்பாக பயனர்கள் கூகுள் பிளஸ் கணக்கில் உள்ள தரவுகளை இறக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூகுள் போட்டோ (Google Photos) பிரிவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் அழிக்கப்படமாட்டாது. கூகுள் பிளஸ் சமுதாய குழுக்களை வைத்திருப்போர் தங்கள் தகவல்களை மார்ச் மாதம் முதல் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.