தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சோதனை முயற்சி நடந்து வருகிறது.2016ம் ஆண்டு சேலம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் திருடிச் செல்லப்பட்டன.
ஆந்திர பிரதேசத்தில் விஜயவாடாவிலும் அதே ஆண்டு குழந்தை ஒன்று அரசு மருத்துவமனையில் காணாமல் போனது. பரந்து விரிந்த பரப்பில் இருக்கும் கட்டடங்கள், அதிக எண்ணிக்கையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை தூக்கிச் செல்வதை பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் கூட இவ்வகை குற்றங்கள் தொடர்ந்து வருவதால், வானொலி அதிர்வெண் அடையாளம் (Radio Frequency Identification - RFID) என்ற தொழில்நுட்பம், குழந்தைகளை தூக்கிச் செல்வதை கண்காணிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
ரேடியோ அதிர்வெண் அடையாளம் என்னும் ஆர்எஃப்ஐடி என்னும் இவ்வகை தொழில்நுட்பம் இரண்டாம் உலக போரில் எதிரி நாட்டு விமானங்களை அடையாளம் காண்பதற்கு ரேடார் மூலம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின், விமான நிலையங்களில் சுமைகள் இருக்குமிடத்தை கண்டறிவதற்கு, மருந்து உற்பத்தி நிறுவனங்களில் கிட்டங்கிகளில் மருந்துகளின் இருப்பை அறிவதற்கு, வாகன தொழிற்சாலைகளில் உதிரி பாகங்கள் உற்பத்தியை கண்காணிப்பதற்கு மற்றும் சுங்க சாவடிகள் என்று பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இத்தொழில்நுட்பம் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்எஃப்ஐடி பட்டை ஒன்று குழந்தையின் கணுக்காலில் கட்டப்படும். குழந்தையின் தாய் மற்றும் உதவியாளருக்கும் கழுத்தில் அணிவது போன்று அட்டை வழங்கப்படும். இம்மூன்றும் ஒரே தொழில்நுட்ப அடையாளத்தை கொண்டவை. மருத்துவமனையிலுள்ள கணினியில் ஒவ்வொரு குழந்தைக்கான விவரமும் பதிவேற்றப்பட்டிருக்கும். மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயில் மற்றும் ஒவ்வொரு வாயிலிலும் இந்தத் தொழில்நுட்ப சமிக்ஞைகளை அறியக்கூடிய சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
பொருத்தமில்லாத நபர், ஆர்எஃப்ஐடி பட்டையுடன் கூடிய குழந்தையை மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு போக முயற்சித்தால், இந்தச் சாதனங்கள் கண்டறிந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதேநேரம், தொடர்புடைய தாயோ, உதவியாளரோ குழந்தையை இச்சாதனங்களை கடந்து கொண்டு செல்லும்போது பச்சை விளக்கு எரிந்து அனுமதியளிக்கும்.
சோதனை நிலையில் தற்போது உள்ள இந்தத் தொழில்நுட்ப பயன்பாடு, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு விரைவில் முழு அளவில் உபயோகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.