பாத்ரூமில் இவற்றைச் செய்கிறீர்களா?

by SAM ASIR, Sep 8, 2020, 19:18 PM IST

குளியலறை - தினமும் நாம் பயன்படுத்தும் இடம். குளித்தால் நிச்சயமாய் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், குளியலறையில் நாம் எவற்றை கவனமாக செய்யவேண்டும்? எவற்றை அங்கு செய்யக்கூடாது என்பதை சரியானவிதத்தில் புரிந்திருக்கிறோம் என்று உறுதியாக கூற இயலாது. குளியலறையைப் பற்றிய இந்த விஷயங்களை நாள்தோறும் நாம் செய்தாலும், போதுமான அளவு கவனித்திருக்கமாட்டோம்.

எட்டமுடியாத பகுதி

நாள்தோறும் சோப்பு பயன்படுத்தி, அழுக்குத் தேய்த்துக் குளித்தாலும் சிலருக்கு சருமத்தில் அரிப்பு, கட்டி போன்றவை ஏற்படக்கூடும். குறிப்பாக முதுகு பகுதியில் இவை தோன்றும். தினமும் ஒன்று அல்லது இரண்டுமுறை குளித்தால்கூட, முதுகில் கை எட்டாத பகுதிகளை கவனம் செலுத்தி தேய்க்காதது சரும பாதிப்புக்குக் காரணமாக இருக்கக்கூடும். உடல் முழுவதும் சோப்பு போட்டு தேய்த்தாலும் நடு முதுகு பகுதியை விட்டுவிடுவதால் அங்கு தேங்கும் வியர்வை, அழுக்கு இவை சரியாக சுத்தப்படுத்தப்படாமல் சரும பாதிப்புக்குக் காரணமாகலாம். அதற்கென கைப்பிடியுள்ள தேய்த்து சுத்தம் செய்யக்கூடிய பிரஷ் (loofah) போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

டூத் பிரஷ்ஷை வைக்கக்கூடாத இடம்

பலர் பல் விளக்கி விட்டு பல் தேய்க்கும் பிரஷ்ஷை குளியலறைக்குள்ளே வைத்துவிடுகிறோம். குளியலறைக்குள் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, மேற்கத்திய வகை கழிப்பறையாயின் அதை flesh செய்யும்போது, வேகமாக தெறிக்கும் நீர்த்துளிகள் எங்கெல்லாமோபடக்கூடும். அதற்கென உள்ள மூடியை (lid) மூடிவிட்டு flesh செய்வது நலம். எப்படியாயினும் கழிப்பறையில் கிருமிகள் இருக்கும். ஆனாலும், குளியலறையில் திறந்தநிலையில் டூத் பிரஷ்ஷை வைப்பது நல்லதல்ல. அதை வேறு இடத்தில் வைக்கலாம். இல்லையென்றால் மூடிய அலமாரியில் வைக்கலாம். கழிப்பறையில் உள்ள ஈகோலி போன்ற கிருமிகள், டூத் பிரஷ்ஷில் தொற்றி, நமக்கும் தொற்று வரக் காரணமாகலாம்.

மொபைல் வேண்டாம்

பலருக்கு மொபைல் பார்க்கும் இடம் கழிப்பறையாகவே உள்ளது. கழிப்பறைக்குச் செல்லும் பத்து நிமிடங்கள் ஃபேஸ்புக் பார்க்காமல் இருப்பது பெரிய பாதுகாப்பு. கழிப்பறைக்குள் பூஞ்சைகள், ஈஸ்ட் போன்ற கிருமிகள் இருக்கக்கூடும். நாம் மொபைல் போனை பயன்படுத்திவிட்டு, அதை அங்கு வைக்கும்போது இக்கிருமிகள் நேரடியாக அதன்மேல் தொற்றிக்கொள்ளும். பிறகு அந்த போனையே நாம் தொட்டுவிட்டு, முகத்தை தொடலாம்; சாப்பிடக்கூடிய உணவுகளை தொடலாம். இதன்மூலம் அக்கிருமிகள் உடலினுள் செல்லும் வாய்ப்பு அதிகம். ஆகவே, குளியலறைக்குள் மொபைல்போனை கொண்டு செல்லாதீர்கள்.

சுத்தம் செய்யப்படாத சீப்பு

தலைமுடியை வாருவதற்கு பிரத்தியேக பிரஷ்களை பலர் வைத்திருப்பர். பலர் வகைவகையான சீப்புகளை வைத்திருப்பர். இவற்றை ஒருபோதும் சுத்தம் செய்வதே இல்லை. நம் தலையிலுள்ள பொடுகுகள் மற்றும் அழுக்கு, உதிர்ந்த முடியோடு சேர்ந்து தலை வாரும் பிரஷ்ஷிலோ, சீப்பிலோ இருக்கக்கூடும். ஆகவே, அவற்றை வாரம் ஒருமுறையாவது நன்கு சுத்தம் செய்யவேண்டும்.

இதுபோன்ற சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் பெரிய உடல் பாதிப்புகளை தடுக்க இயலும்.


More Health News

அதிகம் படித்தவை