குடும்பத்தில் யாரையாவது கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

how to manage corona with family members

by SAM ASIR, Oct 14, 2020, 19:13 PM IST

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக கடந்துவிட்டது. கிருமி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் இத்தனை நாள்களையும் கடத்தி வந்துள்ளோம். கோவிட்-19 கிருமி எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நாள்கள் தங்கியிருக்கும்? அதன் பாதிப்பு விகிதம் குறித்த வெவ்வேறு தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.

நோய் பாதிப்புள்ளவரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என்பது உண்மை. வெளியே உள்ளவர்களோடு சமூக இடைவெளி விட்டு பழகலாம். ஆனால், நம் வீட்டில் யாருக்காவது கோவிட்-19 தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்யலாம்?

அபாயம் அதிகம்

கோவிட் பாதிப்பின் காரணமாக நம் வீட்டில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். நோய் பாதிப்பு ஏற்பட்டவரை கவனிப்பதோடு, உங்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்கள் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கைக்கொள்வது அவசியம்.

தனி அறை

'தனிமைப்படுத்தல்' என்றால் எல்லா பொருள்களும் தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சரியாக புரிந்து கொள்ள வேண்டும். கிருமி பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்தும் எதையும் வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவருக்கு நல்ல காற்றோட்டமுள்ள தனி அறையை ஒதுக்கித் தர வேண்டும். குளியலறை, கழிப்பறை அவருக்கு தனியாக இருக்கவேண்டும். அவருக்கு ஒதுக்கப்படும் அறையில் அவருக்குத் தேவையான எல்லா பொருள்களும் இருக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

உங்கள் சுகாதாரம்

சிறு கவனக்குறைவும் கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் அபாயம் கொண்டது. உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். நோய் பாதிப்புள்ளவர் இருக்கும் அறைக்கு அருகில் தொட நேர்ந்தால் உடனே கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவவும். நோயுற்றவருக்கு உணவு, மருந்து ஆகியவற்றை கொடுக்கவேண்டியிருந்தால் முகக்கவசம் மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே கொடுக்கவேண்டும்.

சுற்றுப்புற சுகாதாரம்

வீட்டில் நோயுற்றவர் இருப்பதால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். நோயுற்றவர் தொடக்கூடிய கழிப்பறை கதவுகள், தொலைபேசி, ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட சாதனங்களை அவ்வப்போது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். ஒருநாளில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சுத்தம் செய்யலாம். குறைந்தது நாளொன்றுக்கு இருமுறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

ஆரோக்கியமான உணவு

நோயுற்றவரை கவனிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் நீங்கள் சாப்பிடாமல் இருந்துவிடக்கூடாது. நீங்கள் சத்துள்ள உணவை சாப்பிட்டு நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் இருக்கவேண்டும். அதுவே உங்களுக்கும் நோயுற்றவருக்கும் நல்லது. வைட்டமின்கள் சி மற்றும் ஏ உள்ள உணவு பொருள்கள், துத்தநாகம் (ஸிங்க்) அதிகமான உணவுகளை சாப்பிட்டால் பாதுகாப்பாக இருக்க முடியும்.

You'r reading குடும்பத்தில் யாரையாவது கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை